சில விபரீதங்களை விளையாட்டு என்று எண்ணி மறந்து விடுகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டிக்டாக் வீடியோ ஒன்று பல்லாயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது. சிறுவன் ஒருவனை இரண்டு இளைஞர்கள் கடத்தி வைத்து இருப்பது போன்ற டிக்டாக் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் விளையாட்டாகவோ, குறும்புத்தனமாகவோ எண்ணி இந்த வீடியோவை பதிவு செய்து இருக்கிறார்கள். இதனை அந்த சிறுவன் நிஜம் என நம்பி கத்தி கதறுகிறான்.
அவர்களிடம் அழுதுகொண்டே தன்னை விட்டு விடும்படி பேச்சு வார்த்தையும் நடத்துகிறான். தெரிந்த பையன் தான் என்று இவர்கள் சொன்னாலும் அந்த சிறுவனின் அந்த நேரத்து அழுகையும், அச்சமும் காண்போரை பதற்றமடைய செய்கிறது. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கில் லைக்குகளையும், பல்லாயிரக்கணக்கான வியூக்களையும் இந்த டிக் டாக் வீடியோ பெற்று வருகிறது. ஆனால் இந்த சிறுவனுக்கு ஏற்படும் அச்சத்திற்கும், மன உளைச்சலிற்க்கும் யார் பொறுப்பு?