சேலத்தில் பூட்டி இருக்கும் வான்வெளி அறிவியல் ஆய்வுக்கூடம் ! மாணவர்கள் வேதனை

இந்தியாவில் முதன் முறையாக சேலம் அரசு பள்ளியில் துவங்கப்பட்ட வான் அறிவியல் ஆய்வுகூடம் பல மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் அதை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம புற மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக சேலம் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் வானறிவியல் ஆய்வகம் தொடங்கப்பட்டது.

 

பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி மையம் சார்பில் மாதிரி ராக்கெட்,ஹெலிகாப்டர், தொலை நோக்கியுடன் ஆய்வகம் மற்றும் பயிற்சி மையமும் அமைக்கபட்டன. இது திறக்கப்பட்டு 6 மாதங்களாகியும் இன்று வரை ஒரு மாணவர் கூட அதை பயன்படுத்தவில்லை. அறிவியல் ஆய்வுக்கு பெங்களூர் அல்லது திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்திற்கு செல்ல வேண்டிய நிலையில், அது போன்ற ஆய்வுக்கூடம் சேலத்தில் அமைக்கப்பட்டதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

ஆனால் திறக்கப்பட்டது முதல் இன்று வரை ஆய்வகத்தின் வாசலில் பூட்டு மட்டுமே தொங்குவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்காக திறக்கப்பட்ட இந்த ஆய்வு கூடத்தில் மேல்நிலை பள்ளி மாணவர்களும் இது வரை அனுமதிக்கபடவில்லை என தெரிய வந்துள்ளது. மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட ஆய்வகம் செயல்படாமல் இருப்பது வேதனைக்குரியது என அந்த ஆய்வகத்தை துவங்க பெரும் முயற்சி எடுத்த ஆசிரியரும், டார்வின் அறிவியல் மன்ற தலைவரும் ஆன தினேஷ் குமார் கூறினார்.

 

பள்ளியில் உள்ள ஆய்வகம் பூட்டப்பட்டுள்ளது தொடர்பாக தலைமை ஆசிரியர் முருகம்மாளிடம் கேட்ட போது அது பயன்பாட்டில் தான் உள்ளது என கூறினார். அதே நேரம் இஸ்ரோ விஞ்ஞானிகள் யாரும் இங்கு வந்து பயிற்சி அளிக்கவில்லை என அவர் புகார் தெரிவித்தார். ஆய்வகம் செயல்பாட்டில் தான் இருக்கிறது என கூறிய முருகம்மாளிடம் இது வரை எத்தனை மாணவர்கள் பார்வை இட்டார்கள் என்ற கேள்விக்கு பதில் ஏதும் இல்லை.

 

கடைக்கோடி கிராமம் ஒன்றில் வான் வெளி ஆய்வகம் தொடங்கப்பட்டும் அது பயனில்லாமல் பூட்டி கிடப்பது மாணவர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பூட்டி கிடக்கும் வான்வெளி ஆய்வகத்தை திறக்க ஆட்சியர் ரோஹினி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Leave a Reply