உடன் பிறக்கவில்லை ஊரும் கிடையாது. ஆனால் தள்ளாடும் வயதில் பிச்சையடுக்க வந்த இடத்தில் தாய், மகன் என்ற புதிய உறவு பிறந்து இருக்கிறது. வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். சுமார் 70 வயது முதியவர் ஒருவர் 95 வயதான மூதாட்டியை தள்ளு வண்டியில் வைத்து திருநெல்வேலி ஆட்சி அலுவலகத்திற்கு தள்ளி கொண்டு வந்தார்.
எதார்த்தமாக விசாரித்தபோது அவர் உதிர்த்த வார்த்தைகள் நெகிழ வைத்தன. குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியவர் செல்வராஜும் மூதாட்டி லட்சுமியம்மாள் என்பவரும் திருநெல்வேலி ரயில்வே சந்திப்பில் சந்தித்து தாய், மகன் உறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.பிச்சை எடுத்து பகிர்ந்து சாப்பிடுவது, உதவிகளை பரிமாறிக்கொள்வது என்ற இருவரிடமும் இந்த வயதிலே புனித உறவு பூத்திருக்கிறது.
பார்வை கோளாறால் பாதிக்கப்பட்ட செல்வ ராஜை திருநெல்வேலி ரயில் சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் இலவச பிரிவுக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்ய வைத்து கவனித்து கொண்டார் லட்சுமியம்மாள். இதே போன்று வாகனம் மோதி லட்சுமியம்மாளுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்று தனது தாய் போல பார்த்துக்கொண்டதாக கூறும் செல்வராஜ் , நடக்க முடியாத லட்சுமியம்மளுக்காக பிச்சை எடுத்த பணத்தில் ஒரு பழைய தள்ளு வண்டியை வாங்கியதாகவும் தெரிவித்தார்.
பழைய தள்ளு வண்டிக்கு பதிலாக புதிய தள்ளு வண்டி வாங்குவதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளார், திருநெல்வேலி ஆட்சியர் பிரபாகர் சதீஷ். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, இன்று ஆதரவற்ற நிலையில் பல வயதான பெற்றோர் தடுமாறி வரும் சூழலில் அடையாளம் தெரியாத செல்வராஜும், லட்சுமியம்மாளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாய், மகன் என்ற புதிய உறவுடன் , உறவின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளனர். இந்த உறவு மற்ற உறவுகளுக்கு ஒரு முன் மாதிரி.