தற்போதைய இளைய தலைமுறையினர் மெதுவாக சாதிய முறையிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதால் கலப்பு திருமணங்கள் அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் பகுதியை சேர்ந்த நிவேதிதா, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பெற்றோர்களிடமிருந்து மிரட்டல் வருவதாகவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு இட வேண்டும் என்றும் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனுதாரர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துகொள்ள அவர்களுக்கு உரிமை உள்ளது என தெரிவித்துள்ளார். அவர்களை குடும்பத்தினரோ,உறவினர்களோ துன்புறுத்தவோ , மிரட்டவோ முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். கலப்பு திருமணம் மட்டுமே சாதியை ஒழிக்கும் நிவாரணியாக இருக்கும் என சிந்தனையாளர்கள் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய இளைய தலைமுறையினர் மெதுவாக சாதிமுறையிலிருந்து வெளிவந்து கொண்டிருப்பதால் கலப்பு திருமணங்கள் அதிகரித்து இருப்பதாகவும், இந்த மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் மேலும் இது சமூதாயத்திற்கு நல்லது என்றும் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.