கொலை வழக்கில் கையெழுத்திட வந்தவர் நீதிமன்ற வாசலிலே வெட்டிக்கொல்ல முயன்ற 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வந்த பிரதீப் என்பவர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு விட்டு தனது நண்பர் தமிழ்வாணன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது,அவர்கள் இருவரும் நீதிமன்ற வளாகம் அருகாமையிலேயே மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய அவர்களை மீட்ட காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.நீதிமன்றத்தின் அருகிலேயே நடைபெற்ற இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் பட்டப்பகலில் நீதிமன்ற வளாகம் அருகே நடைபெற்ற இச்சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சரவணம் பட்டி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் பெற்ற பிரதீப் தனது நண்பன் தமிழ் வாணன் என்பவனுடன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த இருவரையும் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ சர்ச் அருகே நடுரோட்டில் வைத்து முன் விரோதம் காரணமாக கணபதி மூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த சதீஸ் குமார் (எ) வெள்ளை சதீஸ்,மணிகண்டன் (எ) சுருட்டை மணி,சூர்யா,ஜெகதீஷ்,ராஜேஸ்கண்ணா(எ)ராஜேஸ்,ஹரிபிரசாத்(எ)ஹரி(எ)திருட்டு கொசு,ஹரிஹரன் (எ)ஆபீஸ் ஹரி,தனபால் மற்றும் சஞ்சய் தனபால் உள்ளிட்ட 9 பேர் இருசக்கர வாகனங்களில் வந்து டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பிரதீப்,தமிழ்வாணன் இருவரையும் வழிமறித்து,கொலை செய்யும் நோக்கோடு அரிவாளால் வெட்டியதில் இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.அவர்களை மீட்ட காவல் துறையினர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

காயம் பட்ட இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் அன்றைய தினமே சஞ்சய் தனபால் தவிர்த்து மற்ற அனைவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

மேலும்,இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேர் பட்டப்பகலில் பொதுமக்களை பீதியடைய செய்து நடு ரோட்டில் அரிவாளால் வெட்டிய குற்றச்செயலுக்காகவும்,இச்செயலை தொடர்ந்து செய்வதை தடுக்கும் நோக்கத்திலும் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் படி குண்டர் சட்டத்தில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

கோவையை உலுக்கிய இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply