கோவை மாவட்டம் சூலூரில் சாக்கடைக் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியை சேர்ந்த லாசர் என்பவரது மகன் சிபின் (வயது 30).இவர் திருப்பூரில் உள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருவதாக தெரிகிறது.
நேற்று இரவு இவர் சூலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் இரவுப்பணி ஊழியர்களை ஆய்வு செய்துவிட்டு திருப்பூர் திரும்பி செல்லும் பொழுது திருச்சி சாலையில் ராவத்தூர் பிரிவு பகுதியில் நிலைதடுமாறி அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்து உள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் அடைந்ததால் அவரால் எழுந்திருக்க முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சாக்கடை கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடப்பதைப் பார்த்து கால்வாயை எட்டிப் பார்த்தபோது சாக்கடை கால்வாய்க்குள் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்தது தெரியவந்தது.அதைத் தொடர்ந்து அப்பகுதியினர் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் உடனடியாக அருகிலிருந்தவர்களுடன் சேர்ந்து கயிறு மூலம் இறந்த வாலிபரின் சடலத்தை கட்டி மேலே இழுத்து கொண்டு வந்தனர்.அதைத் தொடர்ந்து அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த ஆவணங்களை பார்க்கும்போது இறந்த வாலிபர் குறித்த தகவல்கள் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து இறந்த வாலிபர் சிபின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் திருச்சி சாலை விரிவாக்கம் பணிகள் நடந்து வருவதால் ஆங்காங்கே மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும்,இந்த வாலிபர் சாக்கடை கால்வாயில் விழுந்திருந்த சம்பவத்தில் அவரது பைக்கின் பிரேக் லிவரில் டெலிபோன் கேபிள்கள் சிக்கியிருந்தது இதைப் பார்க்கும்போது சாலைகளின் ஓரத்தில் இடையூறாக இருக்கும் பல கேபிள்கள் வெளியே உள்ளது. வாலிபர் வந்து கொண்டிருக்கும் போது கேபிளில் தனது மோட்டார் சைக்கிளின் பாகம் மாட்டியதால் கால்வாயில் தூக்கி வீசப்பட்டு இறந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாக்கடைக் கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.