செவிலியரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சாவில் மர்மம் இருப்பதாக கூறி அரசு செவிலியரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சூலூர் ஸ்ரீனிவாசா நகரில் வசிக்கும் அரசு செவிலியர் பாண்டி மீனா பல்லடம் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ் வாடிப்பட்டி ஆகும். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சூலூரை சேர்ந்த முரளி சங்கர் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் முரளி சங்கர் வேலைக்கு சென்று விட்டு கடந்த சனிக்கிழமையன்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாண்டி மீனா தூக்கில் தொங்கியநிலையில் இருந்துள்ளதாக தெரிகிறது. உடனே,பதற்றமடைந்த முரளி சங்கர் இதுபற்றி அவரது பெற்றோருக்கு தெரிவித்து விட்டு சடலத்தை கீழே இறங்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் அங்கு வந்த அவரது உறவினர்கள் பாண்டி மீனா இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி சடலத்தை அந்த வீட்டில் இருந்து எடுக்க அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகாத நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இவ்வழக்கை போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

பாண்டி மீனாவின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பதிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் பாண்டி மீனாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருமணமாகி 4 ஆண்டுகளே உள்ள நிலையில் இவ்வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உட்படுத்தப்பட உள்ளது. அரசு செவிலியர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…


Leave a Reply