முன்னாள் முதல்வர் ஜெ. உயிருடன் இருந்த பொழுது தமிழக மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளாகட்டும்,நலத்திட்ட உதவிகளாகட்டும் பல விதங்களில் மக்களுக்கு சேவையாற்றினார்.பொதுமக்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் விதமாக கரும்பு,வெல்லம்,பச்சரிசி உள்ளிட்டவைகளை வழங்கினார்.அவர் இறப்பிற்கு பின்னர் வந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசும் முன்னாள் முதல்வர் ஜெ.வழியில் மக்கள் தைப்பொங்கலை கொண்டாடும் விதமாக சர்க்கரை,கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொருட்களோடு ஒரு படி மேலே போய் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வீதம் வழங்கினர்.இது அடித்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பொருளாதார அடிப்படையில் நலிந்த குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக எடப்பாடி அரசு அறிவித்தது.அதனால் மக்களும் ஆர்வத்துடன் அந்த 2 ஆயிரம் ரூபாயை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்.பின்னர்,மக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு பின்னர் இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் துவக்கியும் வைத்தார்.அதன் பின்னர்,இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் மக்களவை மற்றும் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை அறிவித்தது.தேர்தல் அறிவிப்பு வெளியான நேரம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
2 ஆயிரத்திற்கும் முட்டுக்கட்டை போட்ட திமுக :
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் பொழுது ஏற்கனவே துவக்கப்பட்ட திட்டங்கள் தவிர எவ்வித வளர்ச்சித்திட்ட பணிகளோ,அறிவிப்பினையோ ஆளும் அரசு வெளியிடக்கூடாது.ஆனால்,2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.அதனால் இத்திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முயன்ற பொழுது அதற்கு முட்டுக்கட்டையை போட்டது.நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடையாணையினையும் பெற்றது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் முதல்வர் எடப்பாடி நினைத்திருந்தது போல் அல்லாமல் மாறாக நடந்தது. தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவைக்கும்,காலியாக இருந்த 22 சட்டமன்ற தேர்தலும் முடிவடைந்து திமுக கூட்டணி சார்பில் 37 தொகுதிகளிலும்,அதிமுக கூட்டணி சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகளை தற்போது தளர்த்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களின் போதும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தினை தேர்தலுக்கு பின்பு திமுக தொடர்ந்த வழக்கினை நீதிமன்றத்தில் சந்தித்து வழக்கை முடித்து நிச்சயமாக வழங்கப்படும் என பொதுமக்களிடையே உரையாற்றினார்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ் – சும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களிலும்,பொதுக்கூட்டங்களிலும் எடப்பாடி கூறியதைப்போலவே தேர்தல் முடிந்தவுடன் திமுக தொடர்ந்த வழக்கினை முறியடித்து 2 ஆயிரம் ரூபாய் ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் செலுத்தப்படும் என்று உறுதியுடன் பேசினார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் மாறாக இருப்பதால் தமிழக முதல்வரும்,துணை முதல்வரும் தெரிவித்தது போல 2 ஆயிரம் அனைவரது வங்கிக்கணக்கிற்கு வருமா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள். பொறுத்திருந்து பார்ப்போம் !!