‘வசூல் ராஜா’வாக மாறி வருகிறாரா ஆல்பர்ட் ராஜா? கல்வி பெயரில் பணம் கறப்பதாக மாணவர்கள் கண்ணீர்!

கல்வி என்ற பெயரில், ஒருபுறம் அரசின் சலுகைகள் பெற்றுக் கொண்டு, மறுபுறம் மாணவர்களிடம் பணம் கறப்பதாக, இராமநாதபுரத்தில் செயல்படும் மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம் மீது மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில், மெல்வின் என்ற தொழிற்பயிற்சி நிறுவனம், அங்குள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் தாளாளர், ஆல்பர்ட் ராஜா. இவர், பிரபலமான எஸ்.ஆர்.எம். கல்விக்குழும வேந்தர் பாரிவேந்தரின், இந்திய ஜனநாயக கட்சியின் (வேந்தர் பேரவை) மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

 

முதல் படம் – பாரிவேந்தர். அடுத்து இருப்பவர் ஆல்பர்ட் ராஜா.

 

மெல்வின் தொழிற்பயிற்சி நிறுவனம் தவிர, மேலும் பல்வேறு பெயர்களில் தொழில் பயிற்சி நிறுவனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இராமநாதபுரம் சாலைத் தெருவில் மத்திய மாநில அரசுகளின் உதவி பெற்று, நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

 

சிறிய வணிக வளாகத்தில், நெரிசலான பகுதியில், ஏதோ கடை போல் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மாணவர்களுக்கு உரிய வசதிகள், அடிப்படை தேவைகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

 

 

 

இந்த மையத்தில் பயிற்றுவிக்கப்படும் குறிப்பிட்ட சில தொழிற்பயிற்சிகளுக்கு அரசே கட்டணம் செலுத்துவதாக தெரிகிறது. தொழிற்கல்வி பயனை தரும், அரசு உதவியும் இருப்பதால், கல்விக் கட்டணம் குறைவாக இருக்கும் என்று நம்பி, சுற்று வட்டார பகுதி மாணவர்கள் பலர் இங்கு சேருகின்றனர்.

 

ஆனால், சேர்ந்த பிறகு தான் முற்றிலும் அரசுக்கு எதிர்மறையான செயல்களில் இந்த தொழிற்பயிற்சி நிறுவனம் செயல்படுவது தெரியவருவதாக, நம்மை தொடர்பு கொண்டு பேசிய மாணவர்கள் தெரிவித்தனர். பெயர் வெளியிட விரும்பாத அந்த மாணவர்கள், நம்மிடம் இந்த நிறுவனம் குறித்து அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்தனர்.

 

மாணவர்கள் கூறியதாவது:- நாங்கள் இந்த தொழில் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்த நாள் முதல், பல்வேறு காரணங்களைக் காட்டி, எங்களிடம் பணம் வசூல் செய்வதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் பயிற்சி நிறைவு செய்த மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ் பெறுவது என்பது பெரும் போராட்டமாக உள்ளது. சான்றிதழ் கேட்டால், குறைந்தபட்சம் ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை கேட்பதாக கூறினர்.

 

மாணவர்களின் புகார் குறித்து விளக்கம் அறிய, மெல்வின் கல்வி நிறுவன தாளாளர் ஆல்பர்ட் ராஜாவிடம், ‘குற்றம் குற்றமே’ இதழின் சார்பில் தொடர்பு கொண்ட போது, இந்த குற்றச்சாட்டு எல்லாம் முற்றிலும் பொய்யானவை என்று மட்டும் ஒரே வார்த்தையில் முடித்து கொண்டார்.

 

எதிர்காலம் பாழாகிவிடுமோ என்று கருதியும், புகாருக்கு ஆளாகும் நபர் அரசியலில் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும், காவல்துறையில் புகார் அளிக்க மாணவர்கள் தயங்குகின்றனர். இதை, அவர்கள் சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

 

 

தற்போது இராமநாதபுரம் ஆட்சியராக உள்ள வீரராகவ ராவ், திருவள்ளூர் மற்றும் மதுரையில் இருந்த போது, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுத்து, பலரின் பாராட்டை பெற்றவர்.

 

 

அவர், மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும்; நிறுவனத்தில் பயிலும் மாணவர்களின் குறைகள், தேவைகளை கேட்டறிய வேண்டும்; நிறுவனத்தில் விதிமீறல்கள், முறைகேடுகள் உள்ளதா என்று ஆய்வு நடத்தி, அவ்வாறு இருப்பின் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.


Leave a Reply