ஐ.பி.எல். பட்டத்தை 4ஆம் முறையாக வென்றது மும்பை! ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி போராடி தோல்வி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆம் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி, ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்தது. இதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 3 முறை பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

 

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்தது. ஆட்டத்தை அதிரடியாக துவக்கிய குயின்டான் டி காக் 29 ரன்னில் வெளியேறினார். கேப்டன் ரோகித் சர்மா, 15 ரன்கள், சூர்யகுமார் யாதவ், 15 ரன்கள், குருணல் பாண்ட்யா, 7 ரன் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது.

 

 

பின்னர் வந்த பொல்லார்ட் அதிரடி காட்டினார். இஷான் கிஷன், 23 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 16 ரன்கள், ராகுல் சாஹர் மற்றும் மெக்லெனஹான் டக் அவுட் ஆகினர். 20 ஓவர்களில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 41 ரன், பும்ரா ரன் ஏதுமின்றி, ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

அடுத்து, 150 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது. பாப் டுபிளிஸ்சிஸ்26 ரன், சுரேஷ் ரெய்னா 8 ரன், அம்பத்தி ராயுடு 1, தோனி 2 ரன் என ஏமாற்றம் தந்ததால், சென்னை அணி தடுமாறியது. எனினும், ஷேன் வாட்சன் தொடர்ந்து நேர்த்தியாக ஆடினார். 18-வது ஓவரில் குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் ஷேன் வாட்சன் தொடர்ச்சியாக 3 சிக்சர் விளாசியதால், சென்னை வெற்றி பெறும் என்று கருதப்பட்டது.

 

பிராவோ 15 ரன்னில் ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா, ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை மலிங்கா வீசினார். அபாரமாக ஆடி வந்த ஷேன் வாட்சன், 80 ரன் எடுத்த நிலையில், ரன்அவுட் ஆனார். இதனால், கடைசி பந்தில் 2 ரன் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர், 2 ரன் எடுத்து எல்.பி.டபிள்யூ. ஆனார்.

 

இதன் மூலம், 20 ஓவர்களில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தை கோப்பையை தவற விட்டது. மும்பை அணி, 4-வது முறையாக கோப்பையை வென்றது. ஏற்கனவே, 2013, 2015, 2017-ம் ஆண்டுகளிலும் மும்பை அணி கோப்பையை வென்று இருந்தது.


Leave a Reply