மூன்றாவது அணி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, திமுக தலைவர் ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான நாள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு பிந்தைய வியூகங்களை பற்றி யோசிக்க தொடங்கிவிட்டன. இதனால், அரசியல் களம் பரபரப்பை எட்டியுள்ளது.
ஆட்சி அமைக்க, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாஜக, காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர்ராவ் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒருபகுதியாக, காங்கிரஸ் பாஜக தவிர்த்து, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களை சந்திரசேகர ராவ் சந்தித்து வருகிறார். அண்மையில் கேரள முதல்வர் பினராய் விஜயன், கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தார்.
அவ்வகையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை இன்று மாலை, சந்திரசேகர ராவ் சந்திப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இன்று 4 மணியளவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, ராகுல் தான் பிரதமர் என்று கூறி, காங்கிரஸ் அணிக்கு தான் திமுக ஆதரவை தெரிவித்துள்ளது. எனவே, மூன்றாவது அணிக்கான முயற்சிக்கு, இந்த சந்திப்பு எந்தவகையிலும் பயன்தர வாய்ப்பில்லை என்று, அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.