பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு, பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வுகளில் மீண்டும் மாற்றம் கொண்டுவர கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, சமூக வலைதளங்களில் இன்று செய்திகள் பரவின. குறிப்பாக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் என்று முடிவு செய்திருப்பதாக, அந்த தகவலில் கூறப்பட்டிருந்தது.
மேலும், மொத்தப்பாடங்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைக்கவும்; 10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், சமூகவலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் தகவல்கள் பரவின.
இத்தகவல், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழுக்குத் தீங்கு வந்தால் அக்கினி நட்சத்திர வீதிகளில் இறங்கிப் போராடுவோம் என்று, கவிஞர் வைரமுத்து கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
ஆனால், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல் தவறானது என்று, பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்தி முற்றிலும் தவறானது என்று, அது மறுத்துள்ளது.
அதேபோல், 10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களில் இரு தாள்கள் முறையே பின்பற்றப்படும் எனவும், பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.