தேனியில், பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் இருந்து, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, கேரள பிரமுகர் மணி என்பவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இது தொடர்பாக, தேனியில் உள்ள, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் கெளரி மோகன்தாஸ் என்பவர் வீட்டில், காவல் துறையினர் சோதனையிட்டனர்.
இதில், ஐந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் 10 நாட்டு துப்பாக்கிகள் சிக்கின. அதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்; அவற்றை பறிமுதல் செய்தனர். மோகன் தாசுக்கு மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில், அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம், தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.