கோவையில் நடந்த வாக்குப் பதிவுகளிலும் குளறுபடி? கலெக்டரே ஒப்புக்கொள்ளும் ‘எக்ஸ்குளுசிவ்’ வீடியோ!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : -கோவை விஜயகுமார்


கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோவையிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற உள்ள, 1340 அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் பயிற்சி பெற்றவர்களை சந்தித்து, கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

 

அப்போது அவர் பேசியதாவது: வாக்குப்பதிவு நாளன்று காலை 6:00 மணிக்கு முன்னதாக, அரசியல் கட்சி முகவர்களின் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அவ்வாறு 50 வாக்குகளை முகவர்களை கொண்டு பதிவு செய்யச் சொல்லி, அந்த எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும். பிறகு அதை தவறாமல் அழித்துவிட்டு, சீல் வைத்து வாக்குப்பதிவிற்கு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

 

ஆனால், கடந்த தேர்தலில் பல அலுவலர்கள், மாதிரி வாக்கை அழிக்காமல் தொடர்ந்து வாக்குப்பதிவிற்கு அனுமதித்துள்ளனர். இதனால் வாக்குப் பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், லாக்புக்- கில் உள்ள எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருக்கும். இந்த விவகாரம், எண்ணிக்கையின் போது எனக்குத்தான் தலைவலி தரும்.

 

 

வரும் 23 ம் தேதி, வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சியினரை சமாதானப் படுத்துவது எனக்கு சிரமாக இருக்கும். எனவே, வரும் இடைத் தேர்தலில், இத்தகைய குளறுபடிகள் வராதபடி, கவனமாக செயல்படும்பட வேண்டும் என்று, வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

 

இந்த அறிவுரை தொடர்பான பிரத்யேக வீடியோ ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு கிடைத்துள்ளது. கோவை மாவட்டத்தில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமலேயே வாக்குப்பதிவு நடந்துள்ளதை தேர்தல் அதிகாரியான கலெக்டரே ஒப்புக் கொண்டுள்ளார். இது சர்ச்சையும், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் வாக்குப்பதிவு நடந்தது என்று ஆட்சியரே கூறுகிறார். இது அவருக்கு எப்படி தெரியும்? எங்கெல்லாம் அதுபோல் மாதிரி வாக்குப்பதிவு அழிக்காமல் தேர்தல் நடந்துள்ளது? இந்த பிரச்சனைக்கு, தேர்தல் அலுவலரான அவரது பதில் என்ன என்று, அரசியல் கட்சினர் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

 

இந்த சர்ச்சைகள், சந்தேகங்களுக்கு ஒரே தீர்வு, கோவையிலும் அத்தகைய வாக்குச்சாவடிகள் எவை என்று கண்டறிந்து, மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று, அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply