அயோத்தி வழக்கில் சமரசக்குழுவுக்கு அவகாசம்! ஆக.15 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Publish by: --- Photo :


அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க, சமரசக்குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் தந்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

 

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

இவ்வழக்கில், இரு தரப்பினர் இடையே பேச்சு நடத்த, சமரசக்குழுவை கடந்த மார்ச் 8இல் நியமித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையிலான இக்குழுவில், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மூவருமே, தமிழர்கள் என்பது, மற்றொரு சிறப்பு அம்சம்.

 

இக்குழு, தனது சமரச நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டும். அது தொடர்பான விபரங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்திடமே தெரிவிக்க வேண்டும். ஊடகங்களுக்கு தகவலை கசியவிடக்கூடாது என்று, நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

 

இவ்வழக்கின் அடுத்த விசாரணை இன்று நடைபெற்றது. அதில், சமரச பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று சமரசக்குழு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று, வரும் ஆகஸ்ட் 15 வரை அவகாசம் அளித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


Leave a Reply