கோவிலில் தீபம் ஏற்றப் போகிறீர்களா? கடன், தோஷங்கள் விலக இப்படியும் ஏற்றலாமே!

ஆன்மத்திற்கு பலம் தருவது ஆன்மிகம். நம் துயரங்களுக்கு எல்லாம் தீர்வாக இருப்பது பிரார்த்தனை. அந்த வேண்டுதல் நிறைவேற, கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தி வழிபடுகிறோம். திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். பலவகை தீபங்கள், அதற்கேற்ற பல்வேறு பலன்களும் உள்ளன. அதை சுருக்கமாக காண்போம்.

 

பொதுவாக வீட்டில் தீபம் ஏற்றுவது எனில், சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் ஏற்றுவது மிகவும் நல்லது. முன்வினை பாவங்கள் அகலும்.

 

அதேபோல், மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம் கிடைக்கும். வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும். விளக்கை கைகளால் அணைக்கக்கூடாது. பூ அல்லது, தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.

 

 

விளக்கில் பல முகங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. ஒரு முகம் ஏற்றினால் நினைத்த செயல்கள் நடக்கும்; இரு முகம் ஏற்றினால், குடும்பம் சிறக்கும்; மூன்று முக விளக்கு ஏற்றினால், புத்திரதோஷம் நீங்கும். நான்கு முக விளக்கு ஏற்றினால், செல்வம் பெருகும்; ஐந்து முகம் ஏற்றினால் சகலநன்மையும் உண்டாகும்.

 

விளக்கேற்றும் திசைக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. கிழக்கு நோக்கி ஏற்றினால், துன்பம் நீங்கி, குடும்ப அபிவிருத்தி கைகூடும். மேற்கு திசை எனில், கடன், தோஷம் நீங்கும்; வடக்கு திசை திருமணத்தடை அகலும்; தெற்கு நோக்கி எக்காரணம் கொண்டும் விளக்கேற்றக்கூடாது.

 

தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தும் எண்ணெயை பொறுத்து, அதற்கான பலன் கிடைக்கும். நெய் தீபம், செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்; நல்லெண்ணெய் தீபம், ஆரோக்கியம் தரும்; தேங்காய் எண்ணெய் தீபம், வசீகரம் தரும்; இலுப்பை எண்ணெய், காரிய வெற்றியை தரும்; விளக்கெண்ணெய் தீபம், புகழ் தரும். கடலெண்ணெயில் விளக்கேற்றக் கூடாது.

 

 

தெய்வங்களுக்கேற்ப, விளக்கேற்றி அதற்குரிய பலன்கள் கிடைக்கும். விநாயகர், தேங்காய் எண்ணெய்; மகாலட்சுமி, பசுநெய்; குலதெய்வம், வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்; பைரவருக்கு நல்லெண்ணெய்; அம்மனுக்கு, விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய்; பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு நல்லெண்ணெயில் தீபம் ஏற்றலாம்.


Leave a Reply