தேர்தல் முடிவுக்கு பிறகு திமுகவிடம் 119 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்; கருணாநிதியின் பிறந்தநாளுக்கு முன்பு, மத்தியிலும்,மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை மாவட்டம், சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தென்னம்பாளையம், வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி, சோமனூர் உள்ளிட்ட இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெரும்பான்மை இல்லாத நிலையில், மத்திய அரசு முட்டுக் கொடுத்து வருவதால் தான் அ.தி.மு.க. ஆட்சி நீடித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல தீர்ப்பை தந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறி, வெள்ளைப் பணத்தை ஒழித்தவர் தான் மோடி. மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்தவர். துக்ளக் ஆட்சி, சர்வாதிகார ஆட்சியை நரேந்திர மோடி நடத்துகிறார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதிக்கு முன்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை; தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், 119 உறுப்பினர்கள் திமுக அணியில் இருப்பார்கள் என்று அவர் பேசினார்.