பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் துரிதமாக செயல்பட்டு, இதில் தொடர்புடைய பெண்ணைகைது செய்து, குழந்தையையும் மீட்டனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த காளியாபுரம் அருகே உள்ள நரிகள்பதி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலன்; அவரது மனைவி தேவி. இவர்களுக்கு, ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். தேவி மீண்டும் கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக, கடந்த திங்களன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அன்றிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் தனது உறவினர் சிகிச்சை பெற்று வருவதாக கூறி, அடையாளம் தெரியாத பெண் ஒருவர், தேவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும், கடந்த 4 நாட்களாக குழந்தை கவனிப்பு பகுதியிலேயே அந்தப் பெண் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று தேவியை டிஜ்-சார்ஜ் செய்யப்பட்டார். அவரது கணவர் தேவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தபோது, தானும் வருவதாகக் கூறி அந்தப் பெண் குழந்தையை எடுத்துக்கொள்ள மூவருமாக வந்துள்ளனர். குழந்தையின் தந்தை பாலன் மருந்து வாங்குவதற்காக சென்ற நேரம் பார்த்து, குழந்தையுடன் அந்த பெண் மாயமானார்.
அதிர்ந்து போன தேவியும், பாலனும் மருத்துவமனை முழுவதும் அந்த பெண்ணை தேடியும் காணவில்லை. அழுதபடி அந்த தம்பதி, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையை அந்த பெண் கொண்டு வரும் காட்சியும், மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் குழந்தையுடன் சென்ற காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து, குழந்தையுடன் மாயமான அந்த பெண்ணை காவல்துறையினர் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். இறுதியில், போலீசார் அவரை கைது செய்து, குழந்தையை மீட்டனர். இச்சம்பவம், பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் சர்ச்சை, ரிசார்ட்சில் இளைஞர்கள் மது போதை ஆட்டம் என்று தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வரும் பொள்ளாச்சி, தற்போது குழந்தை கடத்தல் விவகாரத்தால் மீண்டும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.