தொடங்கியது கத்தரி வெயில்! எச்சரிக்கையோடு இருந்தால் இல்லை துயர்!!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இம்மாதம் 29ஆம் தேதி வரை இது இருக்கும். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், இதன் பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.

 

இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, பிப்ரவரி இறுதியில் இருந்தே சூரிய பகவான் சுட்டெரிக்க தொடங்கிவிட்டார். மார்ச் மாதன் அதன் தாக்கம் இன்னும் அதிகரித்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெயிலில் பட்டையை கிளப்பியது; அவ்வப்போது சில இடங்களில் பெய்த மழை, சற்று ஆறுதலாக அமைந்தது.

 

கடந்த 2 மாதங்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகப்பட்சமாக கடந்த 16ம்தேதி 107.6 டிகிரி வெயில் பதிவாயிருந்தது. நேற்று திடீரென வெயில் அதிகரித்து 111.7 டிகிரியாக சுட்டெரித்தது.

 

இந்நிலையில் தான், கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ளது. இது, வரும் 29 ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் வெயிலின் தாக்கம் பலமடங்கு அதிகமாக இருக்கும். அனல் காற்று வீசும்.

 

வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி, அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வெயில் காலத்தில் வியர்வை மூலம் உடலில் நீர்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் உடல் சோர்வு ஏற்படும். மயக்கம், அஜீரனம், சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதைத் தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம்.

 

நீர்ப்போக்கை சமாளிக்க நிறைய குடிநீர் குடிப்பது அவசியம். எளிதில் கிடைக்கும் மோரில் ப்ரோபயாடிக்ஸ் உள்ளது. இது, உடல் சூட்டை குறைக்கும். இளநீர், எலுமிச்சை ஜூஸ், புதினா, துளசி, பெர்ரி பழ ஜூஸ் குடிக்கலாம். இவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதால் வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை நோய் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.

 

 

டீ. காபி, சூடான பானங்கள், எண்ணெய் உணவுகள் தவிர்க்க வேண்டும்.ராகி உடல் வெப்பத்தை அதிகரிப்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது. இறைச்சி, முழு பருப்பு வகைகள் மற்றும் எண்ணைப் பலகாரங்களால், உடல் உபாதைகள், இக்காலத்தில் வரக்கூடும். எனவே, கோடைக்கேற்ற உணவு வகைகள் உட்கொண்டு, உபாதைகளை தவிர்க்க வேண்டும்.


Leave a Reply