ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு அடுத்த அடி! சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் உத்தரவு

சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் சொத்துக்களை முடக்கி வைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

 

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், 40 துணை வீரர்கள் மீது நடந்த தாக்குதல், உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலகோட் பகுதியில், ஜெய்ஷ் இ முகமது இயக்க முகாம்களை, இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கி அழித்தது.

 

அத்துடன், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவுக்கு ஆதரவாகஅமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியன, ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்தன. எனினும், தொடர்ந்து 4 முறை சீனா முட்டுக்கட்டை போட்டது.

 

எனினும் இந்தியா கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக, வேறுவழியின்றி, அண்மையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்திற்கு சீனா ஆதரவு தந்தது.

 

இந்நிலையில், மசூத் அசாரின் சொத்துகளை முடக்கவும், அவர் வெளிநாடு செல்லவும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அவரது சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். மேலும், மசூத் அசார் தனது ஆயுதங்களை விற்பனை செய்யவும் வாங்கவும் தடை விதிக்கப்படுவதாக, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


Leave a Reply