அமமுகவில் சேரப்போகிறாரா செ.ம.வேலுச்சாமி? ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பளிச் பதில்

சூலூர் தொகுதியில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி அ.ம.மு.க.வில் சேருவாரா என்ற கேள்விக்கு, ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு, தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.

 

முன்னாள் அமைச்சரும், கோவை முன்னாள் மேயருமான செ.ம. வேலுச்சாமி, கோவை மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்து வந்தார். எல்லாம், வேலுமணி அமைச்சராகும் வரை தான். வேலுமணி மந்திரியானதும், மாவட்ட அதிமுகவை தன் வசப்படுத்தி, தனது ஆதரவாளர்களுக்கு பொறுப்புகளை வாங்கித்தந்தார்.

 

அத்துடன், கட்சிக்குள் இருக்கும் தனது எதிரணி ஆட்களை தலை தூக்கவிடாமல் செய்தார். இதில் அடங்கி போனவர்களில், செ.ம. வேலுச்சாமி முக்கியமானவர். தன்னை சுற்றி எழுந்த சில சர்ச்சைகளால், உடனடியாக பதிலடி கொடுக்காமல், இன்று வரை மவுனம் காத்து வருகிறார்; சரியான தருணத்திற்கு காத்து இருக்கிறார்.

 

சூலூர் தொகுதியில் போட்டியிட்டு, தன் பலத்தை பெருக்க அவர் திட்டமிட்டார். ஆனால், அமைச்சர் வேலுமணியால், அதுவும் கைகூடவில்லை. எடப்பாடியிடம் முட்டி மோதிப்பார்த்தும், செ.ம. வேலுச்சாமிக்கு தோல்வியே கிடைத்தது; சீட் கிடைக்கவில்லை. இதனால், அவர் மீண்டும் அதிருப்தியின் உச்சகட்டத்தில் இருப்பதாக, ஆதரவாளர்கள் கவலையோடு புலம்புகின்றனர்.

 

இந்த சூழலில் தான், அ.ம.மு.க.வினருடன் அவர் அதிக நெருக்கம் காட்டி வந்தார். சூலூர் தொகுதி தேர்தல் பணியிலும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருக்கிறார். மேலும், தனது சொந்த ஊரான செங்கத்துறைக்குள் வந்த அமமுக வேட்பாளருக்கு, ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு தந்து, கட்சி தலைமைக்கு செ.ம.வேலுச்சாமி மறைமுக எச்சரிக்கையும் விடுத்தார். இதுபோன்ற நடவடிக்கையால், செ.ம. வேலுச்சாமி எந்த நேரத்திலும் தினகரனின் அ.ம.மு.க.வில் சேருவார் என்று, கோவை அதிமுக வட்டாரங்களில் ஒரு பேச்சு உலவி வந்தது.

 

இது குறித்து, அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்பு கொண்டு ‘குற்றம் குற்றமே’ செய்தியாளர் கேட்டதற்கு, அவர் இணைவது பற்றிய தகவல் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

 

எனினும், தேர்தல் முடிவுக்கு பிறகு கொங்கு மண்டல அதிமுகவில் நிச்சயம் பெரியளவில் மாற்றங்கள் இருக்கும் என்பதை ரத்தத்தின் ரத்தங்களே உறுதியாக சொல்கிறார்கள்.


Leave a Reply