சங்கடங்கள் தீர சாமந்தன்கோட்டைக்கு வாருங்கள்! துயரங்களை துடைப்பார் நம் தொந்தி விநாயகர்

கணபதி என்றிட கவலைகள் தீரும். விநாயக பெருமான், நம் அனைவருக்கும் விருப்பமான இஷ்ட தெய்வம். பல பெயர்களில் பல ரூபங்களில் வீதிகள் தோறும் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.

 

திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு விநாயகர் ஆலயங்கள் இருப்பினும், வஞ்சிப்பாளையம் அருகே உள்ள சாமந்தன்கோட்டை ஸ்ரீ தொந்தி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பிரசித்தி பெற்றவர். காரணம், இந்த ஆலயம் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

 

இந்த ஆலயத்தின் சிறப்பை அறிந்து, அங்கு சென்றோம். ஒருபக்கம், மான்கள் கூட்டமாக அங்குமிங்கும் திரிய, மறுபக்கம் மயில்கள் உலா வந்து, பசுமை போர்த்திய அழகிய சிற்றூராக உள்ளது சாமந்தன்கோட்டை.

 

எழில்மிகு ஆலயத்தினுள் நுழையும்போதே, மனதில் பக்தி பிரவாகம் எடுக்கிறது. ஐந்து கரத்தனை யானை முகத்தை என்ற பாடல் கணீரென்று ஒலித்து கொண்டிருந்தது. அது, ஆலய சிவாச்சார்யார் ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களது கணீர் குரல்.

 

சாமந்தன்கோட்டையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ தொந்தி விநாயகர்.

 

கோவிலுக்குள் விசாலமான இடம். கன்னிமூலையில் கணபதி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தவனமும், மரங்களும் மனதிற்கும், உடலுக்கும் இதம் சேர்க்கின்றன.

 

ஆலயத்தின் சிறப்பு பற்றி சிவாச்சார்யார் ஸ்ரீ வெங்கடேஷிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:

 

இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் 750 ஆண்டுகள் பழமை வாய்ந்தவர். முன்னொரு காலத்தில் இப்பகுதியை ஆண்ட அரசரால், இது பிரதிஷ்டை செய்யப்பட்டது. உலகில் தொந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் காசியில் மட்டுமே கணபதி வீற்றிருக்கிறார்.

 

ஆலய அர்ச்சகர் ஸ்ரீ வெங்கடேஷ்

 

அதற்கு அடுத்ததாக, காசியில் பாதி என்ற சிறப்பை பெற்ற அவிநாசி நகரின் தெற்கு புறத்தில் உள்ள சாமந்தன்கோட்டையில் மட்டுமே தொந்தி விநாயகர் என்ற திருப்பெயரில் இறைவன் அருள்பாலிக்கிறார்.

 

தொந்தி விநாயகரை வந்து வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்தால், சங்கடங்கள் அகலும். திருமணத்தடை விலகும்; தொழில் சிறக்கும். கல்வி, செல்வ வளம் பெருகும். மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தியின் போது சிறப்பு யாகம், விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது என்று கூறி முடித்தார்.

 

திருப்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து காலேஜ் ரோடு வழியாக வஞ்சிப்பாளையம் வந்து, அங்கிருந்து தெக்கலூர் செல்லும் சாலையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. அவிநாசியில் இருந்து மங்கலம் செல்லும் சாலை மார்க்கத்திலும் வரலாம்.

 

இக்கோவிலின் தர்ம காரியங்களுக்கு, பி.கே.எஸ். நிட்டிங் காளியப்பன், பி.வி.எஸ். நிட்டிங்ஸ் முருகசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பொருளதவி செய்து இறைத்தொண்டு செய்து வருகிறனர். தினமும் காலை 6:00 மணி முதல் பகல் 12:00; மாலையில் 4:30 முதல், இரவு 7:30 வரை ஆலய நடை திறந்திருக்கும்.

 

மேலும் விவரங்களுக்கு கோவில் சிவாச்சார்யார் ஸ்ரீ வெங்கடேஷை, 99521 34020 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Leave a Reply