குழந்தைகளை வாங்கி பல லட்சத்துக்கு விற்ற பலே நர்ஸ்! காட்டி கொடுத்த ஆடியோவால் கணவருடன் சிக்கினார்

ராசிபுரத்தில், குழந்தைகளை வாங்கி, பல லட்சம் ரூபாய்க்கு விற்று வந்த அரசு செவிலியர், கணவருடன் கைது செய்யப்பட்டார்.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா. இவர், சட்டவிரோதமாக குழந்தைகளை வாங்கி, பல லடசம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

அதன்படி, ஆண் குழந்தைகள் என்றால், ரூ. 4 லட்சம்; பெண் குழந்தைகளை ரூ. 3 லட்சத்துக்கும் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. குழந்தைகளின் தோற்றம், நிறத்தை பொருத்து, விலை இன்னும் அதிகரிக்கும். இதற்காக, பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் ரகசிய தொடர்பு வைத்து, அங்கு குழந்தைகள் இருப்பதை அறிந்து, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு, அவர் விற்பனை செய்து வந்துள்ளார்.

 

ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா

 

அண்மையில், சேலம் – ஓமலூரை ஒருவரிடம் ஓய்வு பெற்ற செவிலியர், குழந்தை விற்பனை பற்றி பேசிய ஆடியோ, வாட்ஸ்-அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய பிறகே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

 

அந்த ஆடியோவில், 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி கொடுத்து வருகிறேன். குழந்தை வேண்டுமென்றால், ரூ.30 ஆயிரம் முன்பணம் தர வேண்டும். குழந்தை வந்ததும் நேரில் வந்து பார்த்து, மீதி தொகையை கொடுத்து எடுத்துச் செல்லலாம். குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் வேண்டுமென்றால், ரூ.70 ஆயிரம் கூடுதலாக தர வேண்டும் என்று அந்த செவிலியர் கூறுவதாக உள்ளது.

 

இதுபற்றி விசாரித்த ராசிபுரம் மகளிர் போலீசார், ஓய்வு பெற்ற நர்சிடம் விசாரணை நடத்தினர். முடிவில், ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply