பெரம்பலூரில், பெண்களை உள்ளூர் அரசியல் புள்ளிகள் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த சோகத்தை விவரிக்கும் ஆடியோ இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலுார் மற்றும் சுற்றுவட்டார பெண்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக, அதே பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் உறுதி அளித்துள்ளார். வேலை கேட்டு தன்னை நாடிவந்த பெண்களை, உள்ளூர் வீடியோகிராபர் ஒருவரது உதவியுடன் அங்குள்ள விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
அத்துடன் வீடியோவை காட்டி, அந்த பெண்களை மிரட்டி, தேவைப்படும் போதெல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இவ்வாறு, அங்கன்வாடி பணி, ஆசிரியர் பணி கேட்டு வந்த பெண்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட, இரு குழந்தைகளின் தாய் ஒருவர், முதலில் பெரம்பலுார் மாவட்ட காவல் உயரதிகாரி ஒருவரிடம், இதுபற்றி புகார் செய்தும், போலீசார் கண்டு கொள்ளவில்லை. அப்பகுதி வழக்கறிஞர் அருள் என்பவர் தான், இந்த விவகாரத்தை, எஸ்.பி. திஷா மிட்டலிடம் கொண்டு போயிருக்கிறார்.
அதன் பிறகு, இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவர தொடங்கியதும், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசியல் பிரமுகரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருடன், தாம் போனில் பேசிய ஆடியோவை, பெரம்பலூர் வழக்கறிஞர் அருள் இன்று வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண், கண்ணீர் மல்க ஆடியோவில் பேசியிருப்பதாவது:
இண்டர்வியூக்காக பெரம்பலூர் குரு லாட்சுக்கு வர சொல்லியிருந்தார்கள். திடீரென அங்கு இண்டர்வியூ இல்லை என்று சொல்லி, டி.எஸ். ஓட்டலுக்கு போக சொன்னார்கள். பதற்றத்தில் அங்கு சென்றோம். அங்கே, அவர்களின் செயல்பாடு சரியாக இல்லை; இண்டெர்வியூக்கான எந்த ஏற்பாடும் அங்கு தெரியவில்லை. மேலும், என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர்.
இதையெல்லாம், அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அதை காட்டி, இண்டெர்நெட்டில் போடுவதாக மிரட்டினர். பின்னர், அடிக்கடி வரச்சொன்னார்கள்; ஒருமுறை, என்னை அறையில் குளிக்கும்படி மிரட்டி, அதையும் படமெடுத்தனர். இதுபோல், பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து என்னையும் மிரட்டி வருகின்றனர். அப்பாவி பெண்களை மிரட்டி சீரழித்தவர்களை சும்மா விடக்கூடாது. நியாயம் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு, பாதிக்கப்பட்ட பெண் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரங்களை மிஞ்சும் அளவுக்கு பெரம்பலூரில் அரங்கேறியுள்ள இந்த கொடுமையில் ஆளுங்கட்சி வி.ஐ.பி. சம்மந்தப்பட்டிருப்பதால் தான் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக, உள்ளூர் மக்கள் பேசிக் கொள்கிறார்.
இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி போலீசார் செயல்பட்டு, பெண்களை சீரழித்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்; அதுவே இத்தகைய கயவர்களுக்கு சிறந்த பாடமாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.