குளச்சல் அருகே காரில் கொண்டுவரப்பட்ட 36 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல்:

Publish by: --- Photo :


கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகத்தை தடுக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தலா 3 பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பறக்கும்படையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குளச்சல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 288 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து அந்த நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


குளச்சல் லெட்சுமிபுரம் சந்திப்பில் பறக்கும்படை அதிகாரி ஷீலா தலைமையில் வாகன சோதனை நடந்தது. சரக்கு ஆட்டோ ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த வியாபாரியிடம் ரூ.66 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்தனர்.

இதேப்போல் விளவங்கோடு தொகுதியில் காரில் கொண்டுவரப்பட்ட 4 லட்சத்து 66 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பத்மநாபபுரம் உட்பட்ட பகுதியில் கார் ஒன்றை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.92 லட்சத்து 90 ஆயிரத்து 285 ரொக்கப்பணமும், 20 மதுபாட்டில்களும், 1 கிலோ 300 கிராம் வெள்ளியும், 300 கிராம் தங்கமும் 14 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.