பீகாரில் 100 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலி.!
பீகார் மாநிலத்தில் சுமார் 100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மாநிலத்தின் பாகல்பூர் மாவட்ட நௌகாசியா பகுதியிலுள்ள கங்கை ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால் படகில் பயணித்த சுமார் 100 பேரும், ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இரண்டு பெண்களின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 7 பேரை காணவில்லை. இந்த விபத்தில் 20 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆற்றில் விழுந்த பலரது நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.







