கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி பயணித்த 18 பேர்!
கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தில் பதுங்கி மகாராஷ்டிராவில் இருந்து உத்திரபிரதேசம் சென்ற 18 பேரை மத்தியபிரதேச போலீசார் மடக்கி பிடித்தனர். கொரொனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கான்கிரீட் கலவை இயந்திர வாகனத்தை மடக்கி போலீசார் சோதனை நடத்தினர். இதில் 18 பேர் பதுங்கிய நிலையில் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோ நோக்கி செல்வதை கண்டு பிடித்தனர். இதையடுத்து 18 பேரையும் கொரொனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை சட்டவிரோதமாக அழைத்துச் சென்றதற்காக வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







