வெளியுறவுத் துறை அமைச்சரைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!
ஜெர்மனியைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் இந்தோ- பசிபிக் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்ரீன் வெஸ்ட்டை சந்தித்தார். அப்போது, பசுமை பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகள் குறித்து அமைச்சர் கேத்ரீனுடன் கலந்துரையாடியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனம், ஐ.டி., உற்பத்தி உள்ளிட்டவற்றில் தமிழ்நாட்டின் வலிமையை எடுத்துரைத்து, இங்கிலாந்தின் முதலீட்டைக் கோரியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இன்று இரவு 9.45 மணிக்கு சுயமரியாதை இயக்கம் மற்றும் அதன் மரபுகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
அதனைத் தொடர்ந்து, இரவு 10 மணி அளவில், பெரியாரின் படத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். முன்னதாக உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்த நிலையில், ஓசூரில் இயங்கி வரும் அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முன்வந்துள்ளது.
லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலிஜென்ஸ் நிறுவனம் சென்னையில், அதன் உலகளாவிய திறன் மையத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் 2026 ஆம் நிதி ஆண்டில் 200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வில்சன் பவர் அன்ட் டிஸ்ட்ரிபியூஷன் டெக்னாலஜிஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் ஒரு புதிய மின்சார மின்மாற்றி உற்பத்தி மையத்தை நிறுவுவதற்காக 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய, முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்தது. இதன் மூலம் 543 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.






