அதிமுகவை விமர்சிக்கக் கூடாது – மத்திய அமைச்சர் அமித்ஷா
அதிமுக குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாஜக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, அதிமுகவையோ, அதன் தலைவர்களையோ பாஜக நிர்வாகிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அமித்ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அதிமுக-பாஜக கூட்டணியை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. அண்மையில், தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அமித்ஷாவின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், அழைக்கப்படாததால் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக பின்னர் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தற்போது என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர்.






