--- --:--:-- --

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகையா கேட்குற? வீட்டு உரிமையாளரை குத்திக் கொன்ற இளைஞர் கைது

8.2

கொரோனா ஊரடங்கால் 4 மாதமாக வாடகை தராததால், வாடகை கேட்டு தகராறு செய்த வீட்டு உரிமையாளரை ஆத்திரத்தில் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னையில் தான் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.

 

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர், தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் அஜித் என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி இருந்த அஜித், கடந்த 4 மாதங்களாக வாடகை தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் வீட்டு உரிமையாளர் குணசேகரனும் வாடகை கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்றிரவு, வீட்டு உரிமையாளர் குணசேகரன், வாடகையை கொடுக்க முடியாவிட்டால் வீட்டை காலி செய் என கறாராக கூறி அஜித்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அஜித், வீட்டு உரிமையாளரை கத்தியால் குத்தியுள்ளார். உயிர் தப்பிக்க தெருவில் ஓடிய குணசேகரனை விரட்டி விரட்டி சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த அஜித்தை குன்றத்தூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாடகைக்கு குடியிருப்போரிடம் கறாராக வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.இந்நிலையில் சென்னை குன்றத்தூரில் வாடகை கேட்டு தகராறு செய்த வீட்டு உரிமையாளரை இளைஞர் ஒருவர் ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon