பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞருக்கு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற உத்தரவு..!
சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக பைக்ரேஸ் செய்த இளைஞருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஒரு பக்கம் இருக்க பொதுமக்களுக்கு இடையூறாக பொது வெளியில் பைக் ரேஸ் நடத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இரவு பகல் பாராமல் இவர்கள் நடத்தும் ரேஸ் விளையாட்டு பல சமயங்களில் விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. சமீபத்தில் சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் மீதான ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு உதவியாளராக ஒரு மாதம் பணி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.





