புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மஞ்சள் அலர்ட்..!
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று அதிகாலை இரண்டரை மணி நிலவரப்படி இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தமிழகத்தின் பாம்பனில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இன்று மாலை அல்லது இரவில் திரிகோணமலையை அடையும் புரவி நாளை மறுநாள் மன்னார் வளைகுடா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதே வலுவுடன் கன்னியாகுமரி பாம்பன் இடையே காவிரிக் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புரெவி புயல் கரையை கடக்கும்போது 95 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்பதால் இதற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கேரளாவில் திருவனந்தபுரம் பத்தினம் திட்டா மற்றும் ஆலப்புலா மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும், கேரளாவிலும் தென்மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனிடையே புயலை எதிர்கொள்ள தமிழகத்தில் 18 தேசிய பேரிடர் மீட்பு குழு கேரளாவில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.







