மேட்டூர் அணையில் இன்று நீர் திறப்பு?
மேட்டூர் அணையில் இருந்து இன்று வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக இன்று உபரிநீர் திறக்கப்படுவதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 81 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை நெருங்கியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, 16 கண் மதகுகள் வழியாக இன்று உபரிநீர் திறக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே, கிடைக்கும் உபரிநீரை முடிந்தளவு குளங்கள், ஏரிகளில் சேமிக்கவும், விவசாயத்திற்கு பயன்படுத்தவும் அதிகாரிகளுக்கு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.





