பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கட்டப் பையில் வீசிச்சென்ற கல்நெஞ்சகாரர்கள் யார்?
புதுக்கோட்டை அருகே கட்டைப்பையில் வைத்து பச்சிளம் குழந்தை வீசப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த உடன் கட்டை பையில் வைத்து வீசும் அளவிற்கு என்ன தவறு செய்தேன் என கேட்பது போல இருக்கிறது இந்த பச்சிளம் குழந்தையின் அழுகுரல்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஆலடிகொள்ளையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வந்த அழுகுரலை கேட்டு திடுக்கிட்டப்படியே சென்ற மூதாட்டி ஒருவர் பேருந்து நிறுத்தத்துக்கு சென்று பார்த்தபோது கட்டப்பை ஒன்றுக்குள் கதறிக் கொண்டிருந்தது அந்த சிசு.
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கட்டப்பைக்குள் வைத்து வீசப்பட்டு இருப்பதை கண்டு பதறிப் போன மூதாட்டி இளைஞர்கள் உதவியுடன் அதை மீட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குழந்தைக்கு தேவையான பால், கொசுவலை போன்றவற்றை இளைஞர்கள் வாங்கிக் கொடுத்துள்ளனர் .யாரோ பெற்ற பிள்ளைக்கு ஆவடியை சேர்ந்த பெண்கள் பாசத்தோடு பாலை புகட்டி உள்ளனர். மருத்துவ பணியாளர்கள் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர்.
குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்த அதிகாரிகள் அதை வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர். புதுக்கோட்டையில் மட்டுமல்ல ராணிப்பேட்டை மற்றும் திருப்பூரிலும் நெஞ்சில் இரக்கமின்றி பிஞ்சு குழந்தையை வீசி சென்றிருக்கிறார்கள். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு என்ற இடத்தில் அகத்தீஸ்வரர் ஆலயம் முன்பு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டது.
குழந்தை வரம் கேட்டு கோவில் கோவிலாக சுற்றும் பலர் மத்தியில் அந்த கோயில் வாசலிலேயே குழந்தையைப் போட்டு சென்ற கல் மனது காரர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைப்போலதிருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையத்தில் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் சிசு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுள்ளது.







