ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்குள் நடப்பது என்ன?
ராஜஸ்தானில் ஆட்சியைக் காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தனது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது. ஜெய்ப்பூரில் மீண்டும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதில் சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தியாளர்களை பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். முதல்வர் பதவியை குறிவைத்து சச்சின் பைலட் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அவரை சமாதானப்படுத்த ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் அவருடன் பேசி உள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில் ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மீண்டும் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சச்சின் பைலட்டும், ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை என ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் நேற்றைய கூட்டத்தில் 106 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றதாக முதல்வர் தரப்பு கூறியுள்ளது.
ராஜஸ்தானில் ஆட்சியையோ, காங்கிரஸ் கட்சியையோ பலவீனப்படுத்த முயற்சி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் சச்சின் பைலட் மறைமுகமாக எச்சரித்து தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இதில் சச்சின் பைலட் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கலாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அழைப்பு விடுத்துள்ளார். பைலட்டையும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் மேற்கொள்ளும் மற்றொரு முயற்சியாக இது கருதப்படுகிறது.
இந்த சூழலில் பைலட்டுக்கு ஆதரவாக உள்ள 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து இருக்கும் ஒரு வீடியோபதிவை அவரது தரப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சச்சின் பைலட் நோக்கம் தலைமை மாற்றம் தான் என்றும், பாஜகவுக்கு மாறுவதோ அல்லது தனி கட்சி தொடங்குவதோ அல்ல என்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
கடந்தாண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் இளம் தலைவர் சச்சின் பைலட் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கட்சி தலைமை பச்சைக்கொடி காட்டிய நிலையில் அப்போதிலிருந்தே பைலட் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.







