பர்தா அணிவது தான் பாலியல் பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்கும்..! சர்ச்சையை கிளப்பிய இம்ரான்கான்..!
பெண்கள் பர்தா அணிவது தான் அவர்களை பாலியல் பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்கும் என்றும், அணியாமல் இருந்தால் ஆண்களின் உணர்ச்சியை தூண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் இம்ரான்கான் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் இம்ரான் கானுடன் நாட்டில் நடக்கும் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்களில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுவும் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் அரசு என்ன செய்யப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த பிரதமர் இம்ரான்கான் சமூகத்தின் தொடர்ந்து மோசமான நடத்தைகள் அதிகரித்தால் அதன் தாக்கம் சமூகத்தில் பிரதிபலிக்க செய்யும் என்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் பர்தா அணிந்தால் ஆண்களின் உணர்ச்சி தூண்டப்படாது. ஒருபக்க சமுதாயத்தில் ஆபாசத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தால் அதன் தாக்கம் சமூகத்தில் எதிரொலிக்க தான் செய்யும் என்றும், உணர்ச்சியை கட்டுப்படுத்தும் மன உறுதி எல்லோரிடமும் இருப்பதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
அத்துடன் இந்தியாவிலும் இதே போன்ற விஷயங்கள் நடப்பதாகவும் இதற்கு இந்திய திரையுலகில் குறிப்பாக பாலிவுட்டில் ஆபாசம் மற்றும் அசிங்கமான காட்சிகள் அதிகரிப்பது தான் காரணம் என்றும் தெரிவித்தார்.






