விஜயின் தலைமைப் பண்பு.. உயர் நீதிமன்றம் கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனு..!
தவெக தலைவர் விஜயின் தலைமைப் பண்பு குறித்து உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், விஜயின் தலைமைப் பண்பு குறித்த உயர்நீதிமன்ற கருத்துகளை நீக்க வலியுறுத்தி தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள் மற்றும் சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், காவல்துறை தடியடி நடத்தியதால்தான் தவெக நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்னை ஏற்பட்டால் எந்நேரத்திலும் விஜய் மற்றும் நிர்வாகிகளின் வாகனத்தை திருப்பி அனுப்ப அதிகாரம் இருந்தும் காவல் துறை அப்படி எதையும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை இன்று விசாரிக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மற்ற மனுக்களோடு சேர்த்து நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேவேளையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனுவில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கரூர் துயர சம்பவம் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறை, மின்சாரத்துறை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பினர் மீதும் வழக்கு பதிந்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு 50 லட்சம் ரூபாயும், விஜய் தலா ஒரு கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் வழக்கில் தேடப்பட்டு வந்த தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட தவெக மாநகர செயலாளர் பவுன்ராஜின் ஜாமின் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி, இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ஜாமின் கொடுக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையே, கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற செல்ல அனுமதி கேட்டு விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு டிஜிபி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவர் விஜயின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக கட்சி சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேதி, நேரம், இடம், வரும் வழி மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்களை கரூர் மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பித்தவுடன் நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் சிஆர்பிஎப் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.






