தென்னிந்தியாவிலேயே நீளமான உயர்மட்ட பாலம்..!
கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தென்னிந்தியாவிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கவுள்ளார். கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார். காலை 9.45 மணிக்கு உலக புத்தொழில் மாநாடு 2025-ஐ முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.
அதன் பின்னர் 11 மணிக்கு கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சுமார் 1,791 கோடி ரூபாயில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10 வழித்தடங்களுடன், தென்னிந்தியாவிலேயே மிக நீளமான உயர் மட்ட பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது அதிர்வு மற்றும் சத்தம் கேட்பதை தவிர்க்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மூலம் கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களாக குறையும். 12 மணிக்கு சிட்கோ தொழிற்பேட்டை அருகே 126 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.






