பயத்தால் தொகுதிக்கு மாறினேனா? விஜயகாந்தை சந்தித்த பின் டிடிவி தினகரன் விளக்கம்!
சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே. நகருக்கு பதிலாக கோவில்பட்டி தொகுதிக்கு மாறியதற்கு பயம் காரணமில்லை என்று, விஜயகாந்தை சந்தித்த பின்னர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் பிரச்சினை காரணமாக, கடைசி நேரத்தில் அங்கிருந்து வெளியேறியது. அதை தொடர்ந்து டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. தற்போது அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்ற டிடிவி தினகரன், அங்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். அவரை சுதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர்.
இதன் பிறகு, தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தேர்தல் வியூகம், பிரச்சார அம்சங்கள் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
விஜயகாந்துடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், வரும் தேர்தலில் அதிமுக, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் கூட்டணியின் நோக்கம் என்றார். அதிமுக, திமுக கட்சிகள் இரண்டுமே, தேர்தல் அறிக்கை மூலம் மக்களை ஏமாற்ற நினைக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த தினகரன், ஆர்.கே.நகருக்கு பதில் தொகுதி மாறி கோவில்பட்டியில் போட்டியிடுவதற்கு பயம் காரணமில்லை. தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.





