--- --:--:-- --

தமிழகத்தில் மீண்டும் லாக் -டவுன் வருமா? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

Radhakrishnan 01

தமிழகத்தில் மீண்டும் லாக் டவுன் வருமா என்பதற்கு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

 

கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது.

 

இந்நிலையில், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

 

‘தமிழகம் உள்பட, 19 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாம் கடந்த ஆண்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 7 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைப் பார்த்திருக்கிறோம். இருந்தபோதும் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு 450 என்ற நிலையில் தற்போது 1000 பேருக்குத் தொற்று ஏற்பட்டு வருவது கவலை அளிக்கிறது.

 

முகக்கவசம் அணியாவிட்டாலும் கொரோனா வராது என்ற அலட்சியம் மக்களிடையே உள்ளது. திருமணம், பிறந்த நாள் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளாலும், அரசியல் நிகழ்ச்சிகளாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் அதிகக் கூட்டம் கூடுகிறது. அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. இதனால் தொற்று இன்னும் அதிகரிக்கலாம்.

 

அரசியல் கூட்டங்களுக்காக பிரத்யேக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் என்றில்லை, எல்லாக் கூட்டங்களுக்கும் மூடிய அறைக்குள் 600 பேர்தான் இருக்க வேண்டும். திறந்த இடம் என்றால் இடத்தின் பரப்பளவில் 50 விழுக்காடு மக்கள்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அதைக் கவனித்துக் கொள்வர்.

 

அரசியல் கூட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும். கட்சித் தொண்டர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை அனைத்துக் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும். கொரோனா அதிகரித்த போதும், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலாகும் என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon