வேகமாக பரவும் கொரோனா… தமிழக தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? தேர்தல் அதிகாரி பரபரப்பு தகவல்!
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்பதற்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு விளக்கம் தந்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மஹாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், டில்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி என்ற நிலையில், தற்போது தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்த நேரத்தில் கொரோனா வந்து மீண்டும் மிரட்டுவது அரசியல் கட்சியினர் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது. தேர்தல் பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகள் வருமோ, அல்லது வீடு வீடாக வாக்கு சேகரிக்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் வேட்பாளர்கள் உள்ளனர்.
ஆனால், தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடப்பது கூட சிக்கலாவிடுமோ என்ற கவலை அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு கொரோனா பரவலின் வேகம் உள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, சென்னையில் இன்று பேட்டி அளித்தார். அப்போது கொரோனா தாக்கம் தேர்தல் தள்ளிப் போகுமா என்பதற்கு அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து நாங்கள் இதுவரை எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. பீகாரில் கொரோனா தொற்று பரவல் இருந்த காலத்தில்தான் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. பீகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது, சுமார் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.
மேலும், பீகாரில் பேரவைத் தேர்தல் நடந்த போது இருந்த கொரோனா பாதிப்பு அளவுக்கு தற்போது தமிழகத்தில் இல்லை. வாக்காளர்களுக்கு நத்தம் விசுவநாதன் பணம் கொடுத்தது பற்றி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.127.64 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.






