--- --:--:-- --

கொரோனா காலத்தில் கேப்டனை கொடுமைப்படுத்தலாமா? தேமுதிகவினர் அதிருப்தி!

vijayakanth 45

உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தை, கொரோனா தொற்று உள்ள சூழலில், பொம்மை போல் பிரசாரத்துக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன என்று, தேமுதிக தொண்டர்கள் சிலர் ஆதங்கப்பட்டு வருந்துகின்றனர்.

 

கடந்த மாதம் 12-ம் தேதி, அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து 118 அடி உயர கம்பத்தில் தேமுதிகவின் கொடியை ஏற்றினார். அன்றைய தினம், கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் ஒரு திறந்த வேனில் அழைத்து வரப்பட்டார்.

 

நீண்ட நாட்களுக்கு பின்னர் கேப்டனை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் அவருடைய உடல் அசைவுகள் மிக மிக மெதுவாக இருந்தது. விஜயகாந்த்தை மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து, படத்தில் சுவற்றில் கால் வைத்து சண்டைப் போட்ட கேப்டனின் நிலைமை இன்று இப்படியாகிவிட்டதே என்று வருந்தினார்கள்.

வரும் சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணியில், 60 இடங்களை பெற்றுக்கொண்டு தேமுதிக போட்டியிடுகிறது. விஜயகாந்திற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் வேலைகள் அனைத்தையும் அவரது மனைவி பிரேமலதா, மச்சான் எல்.கே. சுதீஷ் இருவருமே கவனித்து வந்தனர்.

 

பின்னர் தேர்தல் பணிகள் குறித்து தனது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பிரேமலதா கேப்டன் விரைவில் தேர்தல் களத்திற்கு வருவார். தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் கே.எம்.டில்லி; பொன்னேரி அ.ம.மு.க., வேட்பாளர் பொன்ராஜா ஆகியோரை ஆதரித்து, நேற்று, கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் செய்தார். பிரசாரம் செய்தார் என்று சொல்வதைவிட, பிரசாரத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டார் என்றே சொல்லலாம்.

 

காரணம், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தால் திறந்தவேனில் நீண்ட நேரம் நிற்கவோ, தொண்டர்களை பார்த்து கையசைக்கவோ முடியவில்லை. ஒருசில வார்த்தைகள் கூட அவரால் பேச முடியவில்லை. கொரோனா வைரஸ் தொற்றாமல் இருக்க விஜயகாந்த் முகக் கவசம் அணிந்து இருந்தார்.

 

ஆனால் அவருடைய உடல் அசைவுகள் இயல்பாக இருப்பதுபோல் தெரியவில்லை. அவரால் தேர்தல் பிரச்சார வாகனத்தில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நிற்கவும் முடியவில்லை. இன்னொருவர் பின்பக்கமாக தாங்கிப்பிடித்த நிலையில்தான் அவரால் நிற்கவே முடிந்தது.

 

பிரசார வேணில், விஜயகாந்த் இயல்பாக காணப்படவில்லை. மிகவும் சோர்வாகவே இருந்தார். விஜயகாந்தின் பிரச்சாரம் மொத்தமே 20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை. வேறு எந்த தொகுதிகளுக்கும் செல்லாமல் அவர் உடனடியாக சென்னைக்கு திரும்பிவிட்டார்.

 

கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், உடல் நல பாதிப்புள்ள கேப்டனை பிரசாரத்திற்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இப்படி பொம்மையாக பிரசாரத்திற்கு அழைத்து வர, பிரேமலதா எப்படி ஒப்புக் கொண்டார் என்று தேமுதிகவினரே நொந்து கொண்டனர். தங்களுக்கு வெற்றி கிடைப்பதற்காக, விஜயகாந்தை வைத்து அனுதாபம் தேடிக்கொள்ள இப்படி செய்கிறார்களோ என்று, தேமுதிகவினர் சிலர் கவலையோடு தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon