--- --:--:-- --

தமிழக அரசு அட்வகேட் ஜெனரலாக விஜய் நாராயன் நியமனம்..!

4

மிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று புதிய அரசை அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு அடுத்தடுத்து அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசில் முக்கிய பொறுப்பு வகித்த பலரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். அவ்வகையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராகச் செயல்பட்டு வந்த பி.எஸ். ராமன் ராஜினாமா செய்தார். அவரது இடத்தில் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயணை நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 

இது தொடர்பாக தமிழக அரசின் பொதுத் துறை (சட்ட அலுவலர்கள்) வெளியிட்டுள்ள அரசாணை எண் 335 (நாள்: 13.05.2026) படி, “இந்திய அரசியலமைப்பின் 165(1) ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பி.எஸ். ராமன் அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக, மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் தமிழ்நாட்டின் தலைமை வழக்கறிஞராக (Advocate General) நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர் அப்பதவியின் பொறுப்பை ஏற்கும் நாள் முதல் அமலுக்கு வரும் வகையில், தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விஜய் நாராயண், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். சுவாரசியமாக, இவருடைய தந்தையின் இளைய சகோதரரான கே.கே. வேணுகோபால், தற்போது இந்தியாவின் தலைமை வழக்கறிஞராகப் (Attorney General) பதவி வகித்து வருகிறார். மேலும், இவருடைய தந்தவழித் தாத்தா புகழ்பெற்ற வழக்கறிஞர் எம்.கே. நம்பியார் ஆவார்; தாய்வழித் தாத்தா, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்த சர்தார் கே.எம். பணிக்கர் ஆவார்.

 

 

இவர் தற்போது சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (Madras Bar Association) தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். கடந்த காலத்தில், பணிசார் சட்டம், தொழிலாளர் சட்டம், அரசியலமைப்புச் சட்டம், நிர்வாகச் சட்டம் மற்றும் வணிகச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான வழக்குகளில் வாதாடியுள்ளார். 1977-ஆம் ஆண்டில் லயோலா கல்லூரியில் தனது இளங்கலைப் படிப்பை நிறைவு செய்த விஜய் நாராயண், 1978-இல் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து, 1982-இல் சட்டப் படிப்பை முடித்தார்.

 

அதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அலுவலகத்தில் இணைந்த இவர், ப. சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராகும் வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர், 2004-ஆம் ஆண்டில் இவர் ‘மூத்த வழக்கறிஞர்’ (Senior Advocate) அந்தஸ்தைப் பெற்றார். முன்னதாக, விஜய் நாராயண் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் தலைமை வழக்கறிஞராகக் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Right Menu Icon