இதுதான் பெண்களை மதிக்கும் லட்சணமா? கமலுக்கு வானதி கேள்வி
தொகுதி பிரச்சனை பற்றி விவாதிக்க அழைத்தால், துக்கடா தலைவர் என்று மரியாதை குறைவாக விமர்சிப்பதா என்று மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலுக்கு, பாஜக் தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், மக்கள் நீதிமய்யம் சார்பில் அதன் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். கோவை தெற்கில் பாஜகவின் வானதியை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்திருந்தார். அப்போது பேசிய அவர், தொகுதி பிரச்சனை குறித்து வானதியுடன் கமல்ஹாசன் விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்திருந்தார்.
இதற்கு கமல் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. மாறாக ம.நீ.ம. பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கள் தலைவரை பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுடன் விவாதத்திற்கு அழைத்துள்ளார். விவாதம் செய்தால்தான் யாருக்கு நிர்வாக திறன் உள்ளது தெரியவரும் என்பது அவரது வாதம்.
அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அதனை அடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பாஜக அமைச்சரவையினர் ஒவ்வொருவருடனும் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் வைத்துக்கொள்ளலாம். ஸ்மிருதி இரானி பிரதமருடனான நேரடி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும் என்று கூறியிருந்தார்.

மேலும், இருமுறை தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டு, இப்போது மூன்றாவது முறையாக தோற்கத் தயாராகிறவர் வானதி சீனிவாசன். எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தந்துள்ள வானதி சீனிவாசன், நான் கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்தவள். வழக்கறிஞர் தொழில் செய்து வந்த எனக்கும் குழந்தைகள் உள்ளனர். குடும்ப வாழ்க்கையை விடுத்து பல ஆண்டுகளாக அரசியலில் இறங்கி சேவை புரிந்து வருகிறேன். இதை பொதுமக்களே அறிவார்கள்.
ஆனால், என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று மக்கள் நீதிமய்யம் கூறுவது, பெண்களுக்கு அவர்கள் தரும் மரியாதையின் லட்சியம் இதுதான். ஒவ்வொரு பெண்ணுமே கஷ்டப்பட்டுதான் வாழ்க்கையில் முன்னேறி வருகின்றார். இப்படி முன்னேறி பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களுக்கு, இவர்கள் வைக்கும் விமர்சனம் இதுதான் என்றால், பெண்களை இவர்கள் காப்பாற்றுவார்களா? பெண்கள் நலனில் அக்கறை செலுத்துவார்களா? மக்கள் நீதிமய்யமும், கமல்ஹாசனும் இதற்கு தகுந்த பதிலை அளிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.





