--- --:--:-- --

புதையல் இருப்பதாக 50 அடிக்கு குழி தோண்டிய இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு..!

8

வீட்டில் புதையல் இருப்பதாக மாந்திரீகர்கள் தெரிவித்ததன் பேரில் 50 அடிக்கு குழி தோண்டிய இருவரும் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. நசரத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியைச் சேர்ந்த முத்தையா என்பவரது வீட்டில் கடந்த ஆறு மாதங்களாக 5 மணிக்கு மேலாக குழிதோண்டி வந்துள்ளனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையின் காரணமாக அந்த குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சில நாட்கள் குழி தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலமாக அகற்றி மீண்டும் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

அப்போது திடீரென மூச்சுத் திணறி குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ரகுபதி, நிர்மல் கணபதி மற்றும் முத்தையாவின் இரு மகன்கள் உள்ளிட்ட 4 பேரும் மயங்கி விழுந்து உள்ளனர். இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரகுபதியும் நிர்மல் கணபதியும் உயிரிழந்தனர்.

 

முத்தையாவின் இரு மகன்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முத்தையாவின் வீட்டில் தங்க புதையல் இருப்பதாக கேரளாவைச் சேர்ந்த மாந்திரீகர்கள் தெரிவித்ததாக முத்தையாவின் மகன்களின் நண்பரான ரகுபதி தெரிவித்திருக்கிறார்.

 

இதனடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக புதையலைத் தேடி குழிதோண்டி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புதையல் இருப்பதாக நம்பி இரு உயிர்கள் பறிபோன சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon