சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க உத்தரவு..! மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!!
கொரானா அச்சம் காரணமாக தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உட்பட நாடு முழுவதும் 75 மாவட்டங்களை வரும் 31-ந் தேதி வரை முடக்கவும், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 370 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3 பேர் பலியாகி உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது. கொரானா வைரஸ் பரவல் என்பது இந்தியாவில் 2-வது கட்டத்தில் உள்ள நிலையில், 3-வது கட்டத்துக்கு, அதாவது சமூகத்துக்கு இடையே பரவி விடாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு அனுசரிக்கப்பட்டது. பிரதமர் மோடி விடுத்த இந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து மக்கள் ஊரடங்கை நடத்த வேண்டும் என்ற அழைப்பை ஏற்று இன்று ஒட்டுமொத்தமாக தேசத்தில் உள்ள அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். நாடே வெறிச்சோடியது போன்று, சாலைகளில் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. ஒட்டு மொத்த இந்தியாவின் இயக்கமும் ஸ்தம்பித்து, 130 கோடி இந்திய மக்களின் இந்த ஒற்றுமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன என்றும் கூறலாம்.

இந்நிலையில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் இன்று அதிரடியாகவும், படிப்படியாகவும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன. அதன்படி, நாடு முழுவதும் மார்ச் 31-ந் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து எனவும், 29-ந் தேதி வரை வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவில் தரையிறங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரானா வைரஸ் அறிகுறி மற்றும் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களை வரும் 31-ந் தேதி வரை முடக்க மத்திய உள்துறை அதிரடி உத்தரவை பிடிப்பித்துள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களும் அடங்கும்.இந்த 3 மாவட்டங்களையும் முடக்க உத்தரவிட்டு ஊரடங்கும் பிறப்பிக்கப்படுவதால், இங்கு வசிக்கும் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த 3 மாவட்டங்களுக்குள் வேறு பகுதியைச் சேர்ந்த யாரும் நுழைய முடியாத அளவுக்கு மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்படுகின்றன. அர்தியாவசிய பால், தேவைகளான பால், தண்ணீர், மருந்து தவிர்த்து அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டு போக்குவரத்தும் முற்றிலும் முடக்கப்படுவதால், இந்த மாவட்ட மக்கள் சுமார் 1 கோடிக்கும் மேலானோர் அடுத்த 9 நாட்களுக்கு வீடுகளுக்குள் முடக்கப்படுவதால் பலரும் அன்றாட தேவைகளுக்கு அல்லாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.






