--- --:--:-- --

அமித்ஷாவை வரவேற்ற விஜய்..!

01

காவிரி நீர் பிரச்சனை, கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை போன்ற பரபரப்பான சூழலில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

 

 

கடந்த 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், 31 ஆவது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இதில், தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் சதீசன் பங்கேற்கின்றனர்.

 

 

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளிநாடு சென்றுள்ளதால், அம்மாநில துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதேபோன்று அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், ஆறு மாநில தலைமைச் செயலாளர்கள், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

 

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்றிரவு 9 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அவரை அமைச்சர் ராஜ் மோகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், போஜராஜன், வானதி சீனிவாசன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

 

 

அதன்பின் அங்கிருந்து மாநாடு நடக்க உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவை முதலமைச்சர் விஜய் வரவேற்றார். முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின் இரண்டு முறை டெல்லி சென்றிருந்த போதும் அமித் ஷாவை சந்திக்க முடியாத நிலையில், முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றது. அவர்கள் இருவரும் சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர்.
அமித் ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு இரவு 11 மணியளவில் முதலமைச்சர் விஜய் தனது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

 

 

அதைத்தொடர்ந்து தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு இன்று காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. மத்திய அமைச்சர் அமித் ஷா மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, நீர்வளப் பகிர்வு, குற்றங்கள் தடுப்பு, எல்லைப் பிரச்சனைகள் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் சூழலில் மாநாட்டில் தொகுதி மறுவரையறை விவகாரம் கூடுதல் கவனம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

காவிரி நீர் பங்கீடு, கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை ஆகிய விவகாரங்களில் கர்நாடகா, தமிழகம் இடையே சிக்கல் எழுந்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காவிரி நீர் பிரச்சனையில் முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லத் திட்டமிட்ட நிலையில், விவசாயிகள் போராட்டம் காரணமாக தற்போதைய சூழலில் கர்நாடகா வர வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார். அதன்படி, முதலமைச்சர் விஜயின் கர்நாடக பயணம் ரத்து செய்யப்பட்டது.

 

 

எனவே, இந்த மாநாட்டின்போது இரு மாநில முதலமைச்சர்களும் தனியாகச் சந்தித்து காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பதற்கான விரைவு நீதிமன்றங்களை அமைப்பது, மத்திய அரசு திட்டங்களின் செயலாக்கம் போன்றவை குறித்தும் இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

 

மாநாட்டின் நிறைவாக தென் மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா மதிய உணவு அருந்துகிறார். அதன்பின் நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிற்பகல் 3.45 மணிக்குச் சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டையொட்டி கோவளத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon