121 சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் பாஸ் முறை..!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தனது நெட்வொர்க்கில் உள்ள 121 சுங்கச் சாவடிகளுக்கு (Toll Plazas) டிஜிட்டல் “உள்ளூர் பாஸ்” (Digital Local Pass) வசதியை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் சுங்கச்சாவடியைச் சுற்றியுள்ள உள்ளூர்வாசிகள் ‘ராஜ்மார்க்கயாத்ரா’ (Rajmargyatra) செயலியைப் பயன்படுத்தி மாதாந்திர பாஸைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பாஸ் மூலம் கட்டணம் செலுத்தி, ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குறிப்பிட்ட சுங்கச்சாவடியைக் கடக்கலாம்.
சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லும் ‘மல்டி-லேன் ஃப்ரீ ஃபுளோ’ (MLFF) முறையை ஊக்குவிக்க இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. முதன்முதலாக டெல்லியில் உள்ள முன்ட்கா-பக்கர்வாலா சுங்கச்சாவடியில் ஜூலை 2026-இல் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. வரும் மாதங்களில் மேலும் பல சுங்கச்சாவடிகளுக்கு இது விரிவாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ சுற்றளவுக்குள் வசிக்கும் பகுதிவாசிகள் ‘ராஜ்மார்க்கயாத்ரா’ செயலி மூலம் டிஜிட்டல் முறையில் இந்த பாஸை வாங்க தகுதியுடையவர்கள் ஆவர். முன்பெல்லாம் ஆவணங்களைச் சமர்ப்பிக்க நேரடியாகச் செல்ல வேண்டியிருந்த நிலையில், இப்போது சில நிமிடங்களிலேயே டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளின்படி, வணிகம் சாராத சொந்த வாகன வைத்திருக்கும் உள்ளூர்வாசிகளுக்குச் சுங்கச்சாவடியைக் கடக்க ரூ.350 மாதாந்திரக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ‘டிஜிலாக்கர்’ (DigiLocker) மற்றும் ‘வாஹன்’ (VAHAN) அமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், முகவரி, வாகன விவரங்கள் மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) ஆகியவற்றைத் தானாகவே சரிபார்த்துக் கொள்ளும். இந்த 121 சுங்கச்சாவடிகளின் எல்லைக்குள் வராதவர்கள், மாதாந்திர பாஸ் பெற வழக்கம்போல அருகிலுள்ள சுங்கச்சாவடிக்கு நேரில் செல்ல வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





