--- --:--:-- --

நந்திகிராமில் மம்தா போட்டி! கடும் போட்டியைத்தர பாஜக திட்டம்!

Mamtha 02

சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

தமிழகத்தை போலவே மேற்கு வங்க சட்டசபைக்கும் 8 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு, முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. கடைசி மற்றும் 8ம் கட்ட தேர்தல், ஏப்ரல் 29-ம் தேதி நடக்கிறது. வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகின்றன.

 

ஒருகாலத்தில் இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தில், இம்முறை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

 

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் மம்மா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலில் 50 பெண்கள், 42 இஸ்லாமியமர்கள், 79 தாழ்த்தப்பட்டோர் மற்றும் 17 பழங்குடியின வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, மம்தா பானர்ஜி வரும் 11ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து, நந்திகிராம் தொகுதியில் கடுமையான போட்டியை தர பாஜக திட்டமிட்டுள்ளது. அண்மையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்துள்ள சுவேந்து அதிகாரி, மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

 

எனினும், சுவேந்து அதிகாரியை நிறுத்துவது தொடர்பான இறுதி முடிவை பாஜக தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்த பிறகே, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon