திமுக இப்படி நடத்துகிறதே…! உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்ட கே.எஸ்.அழகிரி!!
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட காங்கிரஸை திமுக நம்மை நடத்தும் விதம் குறித்து குறிப்பிட்டு, செயற்குழுவில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கும் சூழலில், அதிமுக – திமுக இரு அணிகளிலும் இன்னமும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை திமுக முடித்திருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை மட்டுமே நடந்து வருகிறது; சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
கடந்த தேர்தலில், 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு, இம்முறை 20 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று திமுக திட்டவட்டமாக உள்ளது; ஆனால், 30 தொகுதிகளுக்கும் குறைவாக இருந்தால் வேண்டாம் என்பது, பெரும்பாலான் காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது; ராகுல் காந்தியும் இதையே கூறிவிட்டதாக தெரிகிறது.
ஆனால், இதற்கெல்லாம் மு.க. ஸ்டாலின் மசிவதாக தெரியவில்லை; காங்கிரஸுக்கு அதிகபட்சம் 22 தொகுதிகள்; அதற்கு மேல் இல்லை என்ற முடிவில் திமுக இருப்பதாக சொல்கிறார்கள். இதனால், என்ன செய்வதென்று புரியாத காங்கிரஸ் கட்சி, இன்று மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது பலரும், திமுக மிக மோசமாக நடத்துவதாக, அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
அவர் பேசும்போது, “நாம் 15 வருடமாக திமுக கூட்டணியில் உள்ளோம். 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. எனவே கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை அவர்களே தருவார்கள் என எதிர்பார்த்தோம். தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதைவிட நம்மை நடத்திய விதம்….” என்று கூறி பேச முடியாமல் கண்கலங்கியதாக, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், ”இனி திமுகவுடன் நான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன். நீங்களே சென்று பேசி தொகுதிப் பங்கீடு செய்து வாருங்கள், நான் இறுதியாக கையெழுத்திட வருகிறேன்” என்றாராம்.
காங்கிரஸ் எவ்வளவோ விட்டுக் கொடுத்தும் தொகுதிப் பங்கீடு விஷயத்தில், திமுக சற்றும் இறங்கி வர மறுப்பதால், இரு கட்சிகளிடையே கூட்டணி தொடருமா என்று அக்கட்சி தொண்டர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.





